நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் இயக்குநர் வினோத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்ச் வாரியர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மும்முரமாக நடந்தது. சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில், நடிகர் அஜித் கலந்து கொண்டு நடித்தார்.
70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அஜித் வெளிநாடு சென்றார். அங்கு சென்ற அவர் பைக் ரைட் குழுவினருடன் பைக் ரைட் செய்தார். அதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் வெளியாகி வைரலானது. தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அஜித், சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றார்.
இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் சென்னையில் சில நாள்கள் நடந்தது.இதனையடுத்து படுத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் அஜித் கலந்துகொண்டார். அந்த சமயத்தில் அவர் கடந்த வாரம் இமயமலையை சுற்றியிருக்கும் பகுதியில் பைக் ரைட் செய்ததாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் ஏகே 61 படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் படக்குழு பாங்காக் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பைக் ரைடை முடித்துவிட்டு அஜித் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என தெரிகிறது.
சூழல் இப்படி இருக்க பாங்காக் சென்று அங்கேயே மூன்று வாரங்கள் தங்கி படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். மேலும், படப்பிடிப்பில் ஏற்பட்டிருக்கும் தாமதம் காரணமாக தீபாவளிக்கு படத்தை வெளியிட நினைத்த படக்குழு, தற்போது பொங்கலுக்கு வெளியிடலாமா என்பதில் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.