சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர்
கூறியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது உரையாற்றிய அவர், “திமுக தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 சதவீத வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நானும் அவ்வப்போது அங்கு சென்று என்னென்ன கோரிக்கைகளை மக்கள் வைக்கின்றனர். அதற்கு உடனடி தீர்வு காணப்படுகிறதா என்று பார்ப்பேன். அவ்வாறு சமீபத்தில் நான் சென்று பார்த்த போது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன். பத்தாண்டுகளாக முடியாமல் இழுத்தடித்த நிலையில் பத்து நாள்களில் உங்கள் ஆட்சியில் நிறைவேறிவிட்டது. அதுவும் முதலமைச்சரே தொடர்பு கொண்டு விசாரிப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.
இதேபோல் 234 தொகுதிகளிலும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை கண்டறிந்து அது குறித்து நடவடிக்கை எடுக்க அத்தனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதன் அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் வரும் புகார்களும் உடனடியாக தீர்க்கப்படும், இது தான் திராவிட மாடல் ஆட்சி” என்று பேசினார்.