சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – பல்வேறு ஊர்களில் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் ஒரு சில இடத்தில் லேசான மழை பதிவாகியது. இதில் கோயம்பேடு, வடபழனி, எம்.எம்.டி.ஏ, அசோக் நகர், தி.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூரில் பெய்துவரும் மழை காரணமாக தென்பெண்ணை மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதிகபட்சமாக கீழ் செருவாய் பகுதியில் 106 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாத்தனூரில் திறக்கப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கடலுக்கு செல்லும் நிலையில், அதில் அதிகளவு மீன் வருகிறது. அதனை பிடிக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆனால் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர் மழையால் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரியும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்நிலையில் திட்டக்குடி, விருத்தாச்சலம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
image
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாக்கம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்த படி தண்ணீர் செல்கிறது. இதனால் 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது . அதிகபட்சமாக சீர்காழியில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.