ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, பாஜகவை சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார் மீது செருப்பை வீசினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால், அந்த ஆடியோ தன்னுடையது தான் என ஒப்புக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, அதில் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர் என்றார்.
அதன் தொடர்ச்சியாக, பிடிஆர் தரப்புக்கும், அண்ணாமலை தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் தீவிரமடைந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை என பிராக்கெட்டில் ஆடு எமொஜியை போட்டு தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உங்கள் முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழும் நீங்களும் உங்களின் கூட்டாளிகளும், சுயமாக உருவாகி பெருமையுடன் விவசாயம் செய்யும் விவசாயியின் மகனை, ஒரு நபராக ஏற்றுக்கொள்ள முடியாது தான். அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு நீங்கள். நீங்கள் என் செருப்பளவுக்குக் கூட தகுதியில்லாதவர். கவலைப்படாதீர்கள், உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன் என பிடிஆரை அண்ணாமலை மிகக்கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் அல்ல, என்னை அடித்தால் இருமடங்கு திருப்பி அடிப்பேன் என்றார்.
நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் என் செருப்புக்கு தகுதியானவர் இல்லை என்று கூறியதில் தவறில்லை என்ற அண்ணாமலை, “பிடிஆர் குறித்து கருத்தியல் ரீதியாகவே ட்விட்டர்ல் பதில் தந்தேன். ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர் இப்படி பேசலாமா? இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்ற நீதிக்கட்சி. நீதிக்கட்சிக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் தொடர்பு இருந்தது. அதன் வழித்தோன்றல்தான் பிடிஆர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்ப்பேன் என அரசியல் சாசனத்தின் மீது கையெழுத்திட்டவர் முதல்வர். எல்லா சமயத்தவரையும் அரவணைத்து செல்பவராக முதல்வர் இருக்க வேண்டும். முதல்வர்தான் மத அரசியல் செய்கிறார். இஸ்லாமிய, கிறுஸ்தவ பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில்லை என கேள்வி எழுப்பினார்.
“என்னை மிரட்டி பார்த்தால் அது பலிக்காது. நாளையே விவசாயம் பார்க்க துணிந்தவன் நான். உங்களால் கிராமத்துக்கு சென்று விவசாயம் பார்க்க முடியுமா?.” என்றும் அண்ணாமலை அப்போது கேள்வி எழுப்பினார்.