ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. காட்டு மாடுகள் வளர்ப்பு மாடுகள் போன்று தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சகஜமாக வரத்துவங்கிவிட்டன. மேலும், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கும் கூட்டம் கூட்டமாக வலம் வருவது வாடிக்கையாக உள்ளது.
இது ேபான்று மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரும் காட்டு மாடுகளால் தற்போது அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சூர் பகுதியில் வயதான காட்டு மாடு ஒன்று மக்கள் வாழும் பகுதிகளிலேயே உலா வருகிறது. வயது மூப்பின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வலம் வருகிறது.
இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த காட்டுமாடுவை பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கொண்டுச் சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.