வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சீனாவில் தயாரான இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனையான விஷயம் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. அதில், பல்வேறு நாடுகளின், மாநிலங்களில் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் பல மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். மாநாடு நடந்த வளாகத்தில் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியகக்கொடி ஏந்தி வண்ணம் பேரணியாக வந்தனர்.
தேசியக்கொடிகளில் 100 சதவீதம் பாலியஸ்டர் என்ற வாசகத்திற்கு கீழ் ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட ஏராளமான எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாநாடு முடிந்து சென்னை வந்த அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்திய தேசியக்கொடியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதாக ஊடகங்களில் தெரிந்து கொண்டோம். அந்த அடிப்படையில் தேசியக்கொடிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1962 சீனாவுக்கு எதிரான போர் நடந்தது. அதன் பின் 57 ஆண்டுகளில் பெரியளவில் இந்திய – சீன எல்லையில் மிகப்பெரியபதற்றமோ, பிரச்னையுமில்லை. அண்மையில் மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்தது. அதன் பின் சில நேரங்களில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது வேதனையான விஷயம். அதில் வீரமரணமடைந்த வீரர்களின் கல்லறை கூட காயவில்லை. இதற்குள் இந்திய தேசியக்கொடியை சீனாவில் இருந்து தயாரித்து, அதை பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து மாநில சபாநாயகர்களும் கையில் ஏந்தி சென்றது எல்லாருக்கும் வேதனையான விஷயம்.
இந்திய பெருங்கடல் பகுதி அமைதியாகவும், இந்தியாவுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது. அங்கு சீன உளவுக்கப்பல் சென்றது வேதனையானது. கவனிக்கத்தக்க விஷயம்.சீனாவில் இருந்து 800 மடங்கு இறக்குமதி செய்வதும், தேசியக்கொடியை கூட இறக்குமதி செய்வதும் வேதனையான விஷயம் தான் என எண்ணுகிறேன்.
கனடாவில் பேரணியாக சென்ற போது கொடியில் ‘மேட் இன் சீனா ‘ என்று இருந்தது குறித்து கவனித்து ஓம்பிர்லாவிடம் கேட்டோம் . அவர் புன்முறுவலோடு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement