விக்டோரியா : கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார் தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற இளம்பெண்.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சரான ஜான் ஹோர்கன் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து விலக இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 90’எஸ் கிட்டான அஞ்சலி அப்பாதுரை போட்டியிடவுள்ளார். இது கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரசியல் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் அறியப்படும் அஞ்சலி அப்பாதுரை, இசை, சல்சா நடனம் ஆகியவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராம்.
பிரிட்டிஷ் கொலம்பியா முதலமைச்சர்
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி (NDP) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சராக ஜான் ஹோர்கன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமைப் பதவி மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
உட்கட்சித் தேர்தல்
வரும் நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை என்.டி.பி கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். என்.டி.பி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சரகாவும் பொறுப்பேற்பார். 2024ல் நடக்கும் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்.
அஞ்சலி அப்பாதுரை
உட்கட்சி தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா சட்டத்துறை அமைச்சரான டேவிட் எபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத்தான் அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். 1990ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை, சிறுவயதில் தமிழ்நாட்டில் தான் வசித்துள்ளார். அஞ்சலிக்கு 6 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் கனடாவில் குடியேறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்
அஞ்சலி அப்பாதுரை, காலேஜ் ஆஃப் அட்லாண்டாவில் சர்வதேச அரசியல் மற்றும் பருநிலை கொள்கை பாடத்தில் டிகிரி முடித்தார். சுற்றுச்சூழலியலில் ஆர்வம் கொண்ட அஞ்சலி, ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பங்கேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டி ஏன்?
கட்சித் தலைமைப் பதவிக்கான தேர்தலில் நிற்கும் அஞ்சலி அப்பாதுரை கூறுகையில், “நான் கனடாவில் குடியேறியவள். இந்த மண்ணை நேசிக்கிறேன். இது எனது தாய் வீடு. மனிதர்கள் எல்லோரும் சமம் என்று கருதுகிறேன். மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுகிறேன். மனித உரிமைகள், சுற்றுச்சூழலை காக்க போராடி வருகிறேன். முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.