காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் பாதுகாப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி…

ஈரோடு: காவிரி ஆற்றில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரியோரம் உள்ள கிராம மக்கள் தங்க வைக்க 11 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடாகாவிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தமிழகத்தில் உள்ள காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால், வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பவானி யில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் அம்மாபேட்டை,  கருங்கல்பாளையம், கொடுமுடி பகுதிகளிலும் வெள்ளம் சூழந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மக்களை மீட்டு, முகாம்களில் தங்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த பகுதிகளைச் சேர்ந்த  343 குடும்பங்களை சேர்ந்த 1,056 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் ஆய்வு செய்தார். மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆய்வின்போது வருவாய்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறையினரும் உடன் இருந்தனர். துணைமேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெயக்குமாரும் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.