இந்திய ரயில்வேயின் வலைதளமான, இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) போர்ட்டலிலிருந்து, சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை, சட்டவிரோத மென்பொருளைப் (software) பயன்படுத்தி வாங்கி, பயணிகளுக்கு அதிக தொகைக்கு விற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக மேற்கு ரயில்வே, குஜராத் மாநிலம், ராஜ்கோட் பிரிவின் ரயில்வே போலீஸ் படை, இதுவரை 6 பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ.43.42 லட்சம் மதிப்பிலான 1,688 விற்கப்படாத டிக்கெட்டுகளை மீட்டிருக்கிறது.
இது குறித்துப் பேசிய ரயில்வே போலீஸ் படையின் பிரதேச பாதுகாப்பு ஆணையர் பவன் குமார் ஸ்ரீவஸ்தவா, “கடந்த சில மாதங்களாகவே இந்த மோசடி நடந்து வந்தது. இதுபற்றிய முழுமையான விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்கள் போலியான ஐ.பி முகவரிகளை(IP Address) உருவாக்குவது, சட்டவிரோத மென்பொருள்களை உருவாக்குவது தவிர, IRCTC-ல் பயனர் ஐடி-களை உருவாக்கி, டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான OTP-யை பெறுவதற்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய `disposable’ செல்போன் நம்பர்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இதில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், எங்கள் குழு ராஜ்கோட்டைச் சேர்ந்த பயண முகவர் மனன் வகேலாவை கடந்த மே மாதம் கைதுசெய்தது. இவர், IRCTC போர்ட்டலிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியிருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக சட்டவிரோத மென்பொருளை விற்றதற்காக மும்பையில் கன்ஹையா கிரி என்பவரை கடந்த ஜூலை மாதம் கைதுசெய்தோம். அதைத் தொடர்ந்து, குஜராத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் டெவலப்பர் அபிஷேக் சர்மா என்பவரும் கைதுசெய்யப்பட்டார். கணினியிலிருந்து முன்பதிவு செய்யக்கூடிய டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை IRCTC வரம்புக்குட்படுத்தியதால், குற்றம்சாட்டப்பட்டவர் பல போலி ஐ.பி முகவரிகளை உருவாக்க மென்பொருளை உருவாக்கினார். இது ஒரே கணினியைப் பயன்படுத்தி மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவும். இதில் சட்டவிரோதமாக சுமார் 28.14 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டிருக்கின்றன. மேலும் இதில் ஒரு கும்பல், டிக்கெட்டுகளை விற்று பெரிய கமிஷன் தொகையையும் பெற்றிருக்கிறது” எனத் தெரிவித்தார்.