விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பல மடங்கு கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் பலரும் தங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி வரையிலான 74 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்கு வழிச்சாலையை நிர்வகித்து வரும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க இதுநாள் வரை ரூ.90 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் ரூ.100 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேப்போல் பலமுறை பயணிக்க ரூ.135 லிருந்து ரூ.150 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.155 லிருந்து ரூ.180 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.235 லிருந்து ரூ.280 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேப்போல் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேப்போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM