திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் இருந்து கொச்சி வருகிறார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்தின் அருகிலுள்ள அரங்கத்தில் நடைபெறும் பாஜவின் பொது மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதன்பின் மாலை 6 மணியளவில் கொச்சி விமான நிலைய அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதேபோல கோட்டயத்தில் இரட்டை ரயில் பாதை மற்றும் கொல்லும்-புனலூர் மின் ரயில் பாதை, எர்ணாகுளம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை 9.30 மணியளவில் இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி கப்பல் கட்டும் சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதன் பின்னர் மதியம் அவர் மங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறார்.