கடலூர்: செல்போனில் ஒருவர் பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறையை விளக்க, அதை பார்த்து வேறொருவர் பிரசவம் பார்த்து, குழந்தையை பத்திரமாக தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கும் பல காட்சிகளை நாம் பல படங்களில் பார்த்துள்ளோம். அதே போல் ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் முடிவு நல்ல முடிவாக இருக்கவில்லை. செல்போன் மூலம் மருத்துவர்கள் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு புது சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்ததாகவும், ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாமல் செல்போன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டதால், குழந்தை இறந்து பிறந்ததாகவும் கூறியுள்ளார். ஜெபராஜின் மனைவி ஜெஸ்ஸி ஜெனிபருக்கு காலை 11:15 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பரிதாபமாக குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.