மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவுத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. தாவுத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவுசெய்தது.
அதனடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தாவுத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக மும்பையில் ரெய்டு நடத்தியது. அதனைத் தொடர்ந்து தாவுத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாசகீல் மைத்துனர் சலீம் ப்ரூட் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்டிருக்கும் செய்தியில் தாவுத் இப்ராஹிம் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது தவிர தாவுத் இப்ராஹிம் சகோதரர் அனீஸ் இப்ராஹிம், டைகர் மேமன், ஜாவேத் ஜிக்னா ஆகியோர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தாவுத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டாசகீல் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதோடு, லஷ்கர் இ தொய்பா, அல்-கொய்தா, ஜெய்ஸ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருக்கிறது. இது தவிர தாவுத் சகோதரியுடன் தொழில்தொடர்பு வைத்ததாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்கை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.