கடந்த வாரம் வெளியான நடிகர் தேவர்கொண்டா படமான “லைகர்” அனைத்து இடங்களிலும் படுதோல்வியை அடைந்ததையடுத்து தனது முதலீட்டில் முக்கால் வாசியை இழந்துவிட்டதாக லைகர் பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கி நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து பான் இந்தியா படமாக வெளிவந்தது ”லைகர்”. பிரபல குத்துத் சண்டை வீரர் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோனித் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் ரூ.125 கோடி வரையிலான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வெளிவந்த லைகர் படம் மக்களின் வரவேற்பை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. இதனையடுத்து தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளனர்.
தற்போது லைகர் படத்திற்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் நஷ்டம் குறித்து தெற்கில் படத்தின் விநியோகஸ்தராக இருந்த வாரங்கல் ஸ்ரீனு பேசுகையில், “எனது முதலீட்டில் 65% நஷ்டமடைந்துவிட்டேன்” என்றார். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் ”நாசமாக போய்விட்டது” என்று கூறினார்.
மேலும் “நடிகர்களைத் தடை செய்வதை பற்றி யோசிக்காமல், ஏழைக் குடும்பங்களைச் சீரழிக்கிறோம் என்பதை பற்றி நாம் உணர வேண்டும்” என்று கூறிய அவர், தொடர்ந்து திரையுலகம் மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று ஆதங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் லைகர் படத்தில் நடித்ததற்கு அவருக்கு மட்டும் சுமார் ரூ.25 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.