பீகாரில் இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா

பாட்னா: பீகாரில் சட்டத்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தனது அமைச்சரவையை சமீபத்தில் விரிவாக்கம் செய்தார். அப்போது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மேலவை உறுப்பினர் கார்த்திகேய சிங் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம் நடந்த அன்று 2014ம் ஆண்டில் கடத்தல் வழக்கில் கார்த்திகேய சிங் டானாபூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். ஆனால் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் பாட்னாவில் அமைச்சராக பதவியேற்றார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சியான பாஜ கடுமையாக விமர்சித்தது. மேலும், கார்த்திகேய சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், ‘இதுபற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை’ என்றார். ஆனாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த சர்ச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்வர் நிதிஷ்குமாரையும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் வலியுறுத்தியது.

இதற்கிடையே, கைது வாரண்டை எதிர்கொண்டுள்ள கார்த்திகேய சிங்கின் இலாகா மாற்றப்பட்டது. அவருக்கு கரும்பு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. அவரிடம் இருந்த சட்டத்துறை, முதலில் கரும்பு தொழில் துறை அமைச்சகத்தை கவனித்து வந்த ஷமீம் அகமதுவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கார்த்திகேய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேய சிங்கின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.