திருச்சி: முக்கொம்பில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர்வரத்து உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 1.15 லட்சம் கனஅடி தண்ணீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்புக்கு 1 லட்சத்து 95ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இங்கிருந்து காவிரியில் 61,706 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,32,779 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்புவிலிருந்து கல்லணைக்கு 61,944 கனஅடி தண்ணீர் வருகிறது. கல்லணையிலிருந்து காவிரியில் 4,812 கன அடி, வெண்ணாற்றில் 3,010 கன அடி, கல்லணை கால்வாயில் 2,017, கொள்ளிடத்தில் 41,165 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தில் 62 வீடுகளுக்குள் காவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 165 பேர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி சேவை மையம் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருப்பதால் மநாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் திட்டு, மேலவாடி, கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 400க்கு மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு முகாம்களுக்கு சென்றனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கொள்ளிடம் ஆறு மற்றும் கிராமங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். பின்னர், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். திருச்சி காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறைகளை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் மக்கள் செல்லாதபடி படித்துறைகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.