மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அமைதியின் பிம்பமாக கடந்த காலங்களில் அறியப்பட்ட மிகைல் கோர்போசேவ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ”சிறந்த அரசியல் பார்வைக் கொண்ட நபர். அரியத் தலைவர். வித்தியாசமான எதிர்காலம் சாத்தியம் என்பதை காண்பிக்க தனது முழு வாழ்க்கையையும் அவர் பணயம் வைத்தார்.”
ஐ. நா. சபை பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ்: ”வரலாற்றின் போக்கை மாற்றிய அன்பான தலைவர்களுள் ஒருவர். உலக நாடுகள் உயர்ந்த, உலகளாவிய தலைவரை இழந்துவிட்டது. அமைதிக்காக அயராது வாதிடுபவர். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.”
இந்திய பிரதமர் மோடி: “வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த 20-ம் நூற்றாண்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மிகைல் கோர்பசேவ் மறைவிற்காக அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இந்தியாவுடனான உறவை பேணுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம்.”
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்: “மிகைல் கோர்பசேவ் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய தலைவராக இருந்தார். பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரவும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதுவே சுதந்திர ஐரோப்பாவுக்கான வழியைத் திறந்தது. இவை எல்லாம் எங்களால் மறக்க முடியாத ஒன்று.”
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: “பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வர அவர் காட்டிய தைரியமும், நேர்மையையும் எப்போதும் பாராட்டுக்குரியது.”
பிரான்ஸ் அதிபர் மக்ரோன்: “ஒரு அமைதியான மனிதர், அவரது தேர்வுகள் ரஷ்யர்களுக்கு சுதந்திரத்திற்கான வழியைத் திறந்தன.”
ரஷ்ய அதிபர் புதின்: “வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவர் மிகைல் கோர்போசேவ். சிக்கலான பொருளாதார, சமூக சவால்கள் இருந்த காலக்கட்டத்தில் அவர் நம் நாட்டை வழி நடத்தினார். சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அவர் ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மனிதாபிமானம் சார்ந்து அவர் எடுத்து வந்த நடவடிக்கைகளை நான் ககவனித்து வந்திருக்கிறேன். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து கொள்கிறேன்.”