பெங்களூரு: விஜயநகரா ஹொஸ்பேட்டுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங் நேற்று முன்தினம் சென்றார். அவரிடம், குறிப்பிட்ட சமுதாயத்தினர், நில விவகாரம் தொடர்பான பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கோரினர். அந்த நிலம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த போலப்பா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரை அழைத்து அமைச்சர் ஆனந்த் சிங், விசாரித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம், போலப்பாவும் அவரது குடும்பத்தினர் 5 பேரும், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு, எஸ்பி, இல்லாததால், வெளியே வந்த அவர்கள், தாங்கள் தயாராக கொண்டு வந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றினர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் ஓடி வந்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், ‘நேற்று முன்தினம் அமைச்சர் ஆனந்த் சிங், 20 முதல் 25 பேருடன் என் வீட்டுக்கு வந்தார். நிலத்தை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டினார். அவர்கள் மீது புகார் அளிக்க வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அமைச்சர் ஆனந்த் சிங் உட்பட 4 பேர் மீதும், பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த போலப்பா, அவரது குடும்பத்தினர் 5 பேர் மீதும் ஹொஸ்பேட் ரூரல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் சிங் கூறுகையில், ‘என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய். யாரையும் நான் மிரட்டவில்லை. மிரட்டியதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்’ என்றார்.