தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தை அதிமுகவே அலங்கரித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில் தமிழக மூத்த அரசியல்வாதிகளும், முன்னாள் முதல்வர்களுமான கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே மறைந்தனர்.
இந்த சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணியை அமைத்து திமுக தயாராக இருந்தாலும் வழக்கம் போல மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய திட்டத்தை அறிவித்தால் கூடுதல் பலமாக இருக்கும் என கருதியது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.
ஆனாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆக இருக்கும் நிலையில் அது தொடர்பான பேச்சே இன்னமும் எழவில்லை. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இந்த வாக்குறுதி தான்.
அப்படி இருக்கையில் திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் கடந்தும் இன்னமும் ரூ.1000 வழங்கப்படவில்லையே என தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகள் ஏங்கி தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்து கேள்விகள் கேட்டு தமிழக அரசை குடைந்து வருகின்றனர்.
மேலும் இதையே வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு திமுக அரசு பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மக்களை வஞ்சிப்பதாக சரமாரி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது, தமிழக மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் திமுக அரசுக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கி இருப்பதாக உடன் பிறப்புகளே கூறி கவலைப்படுகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர்
தமிழக நிதிநிலை சரியானதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறிவிட்டாலும் நிஜத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்கு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.
அதன்படி அரசு ஊழியர்கள், அரசு பென்ஷன் பெறுபவர்கள் இல்லாத ஒரு லட்சம் பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் எந்த நேரத்திலும் குடும்பத் தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி தருகிற வகையில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும், புனித ஜார்ஜ் கோட்டை வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
ஓபிஎஸ்-க்கு உதவும் முதல்வர்? பகீர் கிளப்பிய கே.பி.முனுசாமி!
இந்த தகவல் தமிழகம் முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், பாரபட்சம் இல்லாமல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.