மதுரை : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை.
இந்நிலையில், தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதனால் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்”. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு பணியிடம் காலியாகும் போது, அந்த காலியிடத்துக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டண கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தன நீதிபதி தடை விதித்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தமிழக மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு கோரிக்கை மீது இறுதி முடிவெடுக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.