48 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 5 இலட்சம் ரூபாய் வரையிலான ஆகக்கூடிய தண்டனையை விதிக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு ஏற்புடைய நிபந்தனைகள் பல விதிக்கப்பட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதற்கமைவாக நுகர்வோர் கோரும் பொருள் நியாயமான கால எல்லைக்குள் தாமதிக்காது வழங்கப்படுவதுடன் போதுமான மூலப்பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களில் அரிசி, கோதுமை மா, முட்டை, பருப்பு, டின் மீன், பால் மா, வெள்ளை பூண்டு , கோழியிறைச்சி, பாசி பயறு உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி ஆகியவை அடங்குகின்றன.
இதேபோன்று கட்டிட நிர்மாண துறைக்கு தேவையான சீமெந்து செங்கல், மணல், உலோக பொருட்கள் , மோட்டார் வாகன உதிரிபாகங்கள், உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்கள் ஆகியனவும் இதில் அடங்குகின்றன.
சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் போது அந்த பொருட்களின் அளவு, நுகர்வோரின் ஆள் அடையாளம் , திகதி மற்றும் பெறுமதி உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய பற்றுச்சீட்டு பிரதியை அனைத்து சந்தர்ப்பத்திலும் வைத்திருக்க வேண்டும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சந்தா கிரியெல்ல அறிவித்துள்ளார்.