தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோர கிராமங்களில் உள்ள வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள், தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலணை மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் கூட்டு குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டது. பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளப் பெருக்கு காரணமாக தஞ்சை மாவட்டம் ஆச்சனூர், மருவூர். சாத்தனூர், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வாழை தோட்டத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் மார்பளவு நீரில் மூழ்கி உள்ளன. மேலும். வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வாழை மரங்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.
தொடர் மழையுடன், வெள்ள நீரும் அதிகரித்து வருவதால் ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ள நிலையில், மிக பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மூன்றாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கியதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லுக்கு உள்ளது போல் வாழைக்கும் பயிர் காப்பீடு நடைமுறைப்படுத்த வேண்டும். நீரில் மூழ்கி உள்ள வாழை தோட்டங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என வாழை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.