காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் கும்பல் அட்டகாசம்: ஸ்டாலின் கவனிப்பாரா என டிடிவி தினகரன் கேள்வி…

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்‍கி அட்டகாசம்  செய்த நிகழ்வை முதலமைச்சர் ஸ்டாலின் கவனிப்பாரா? போதைப் பொருள் ஒழிப்பை உண்மையான அக்கறையோடு செயல்படுத்த முன்வாரா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி் தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.  நேற்று இரவு உணவகத்திற்கு வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். அப்போது திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல் அந்த வாலிபரை தாக்கியது. அத்துடன் உணவகத்திற்குள் இருந்த பொருட்களையும் அந்த கும்பல் தூக்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டது.

பின்னர், அதே கும்பல் அருகில் இருந்த சலூன் கடைக்குச் சென்று கடைமுன்பு இருந்த பேனரைக் கிழித்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கியது. மேலும் அவ்வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகராறில் ஈடுபட்டது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

கஞ்சா கும்பல் தாக்கியதால் காயம்பட்ட அன்சர் இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போதை ஆசாமிகள் அட்டூழியத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்ஆணையர் அலுவலகம் போதை கும்பல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட விவகாரம், காவல்துறையினர் மீதான நம்பிக்கையின்மையை பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வைரலாகின.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை, இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம்.

வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஒழிப்பை உண்மையான அக்கறையோடு காவல்துறை செயல்படுத்த வேண்டும்.

அப்படி செய்தால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கவனிப்பாரா?’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.