கோட்டயம்: கேரளா மாநிலத்தில் ஒரு வாரமாக 200 கி.மீ. தூரம் பயணித்த ராஜநாகம் ஒன்று வனத்துறையினரால் பிடிபட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு காரில் மலப்புரம், வழிக்கடவு சென்றார், அப்போது தான் ஓட்டி வந்த காரை அடர்ந்த காட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த காரில் ஒரு ராஜநாகம் ஏறிக் கொண்டது. இதை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். உடனே சுஜித்திடம் கூறினர். அவரும் வனத்துறையினரை வரவழைத்து தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
பாம்பு
பாம்பு காரினுள் போயிருக்கலாம். ஆனால் அங்கு தனக்கு எந்த இரையும் கிடைக்கவில்லை என்பதை வெளியேறி காட்டுக்குள் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மனதுடன் காரை எடுத்துக் கொண்டு கோட்டயத்திற்கு வந்தார்.
பாம்பு பயம்
எனினும் அவருக்கு பாம்பு பயம் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து காரை சர்வீஸ் விட்டு பார்த்தார். அப்போது அந்த பாம்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பாம்பு அதிகாரிகள் சொன்னது போல் போய்விட்டதாக கருதிய சுஜித் ஒரு மாதகாலமாக தனது மனைவி குழந்தைகளுடன் அதே காரில் 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.
10 நாட்கள்
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காருக்குள் பாம்பின் சட்டை கழற்றப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பரிசோதனை செய்தார். அப்போதும் பாம்பு தென்படவில்லை.
சுஜித் வீடு
இந்த நிலையில் சுஜித்தின் வீட்டருகே பெரிய பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட சுஜித், உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து 10 அடி நீள பாம்பை பிடித்தனர். மீண்டும் வழிக்கடவு வனப்பகுதிக்கே கொண்டு போய் விட்டனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணம் மேற்கொண்ட ராஜநாகத்தை நினைத்து சுஜித் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு வேளை யாரையாவது தீண்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும். மிக கொடூரமான விஷப்பாம்பு என்பதால் நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது.