இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி அறிமுகம்!

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்விலை ரூ.200 முதல் 400க்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி இதுவரை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும்போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களிடையே அடிக்கடி ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8 ஆம் தேதி அன்று தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பரிசோதனைகள் வெற்றியடைந்த நிலையில், மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. 100 சதவிகிதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி  விலை ₹ 200-400 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது இன்னும் சில மாதங்களில் பரவலாக மக்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி அறிமுகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்,  தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த கட்டமாக அவற்றைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதாகவும் விஞ்ஞானப்பூர்வ நிறைவு உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கோவிட் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தவர், “ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் தடுப்பு சுகாதாரம் பற்றி சிந்திக்க வைத்துள்ளன, இப்போது அதை வாங்க முடியும். உயிரி தொழில்நுட்பத் துறை இந்த விஷயத்தில் முன்னணியில் உள்ளது மற்றும் ஒத்துழைப்பு முறையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

“அறிவியல் முயற்சிகள் சில சமயங்களில் அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. எனவே அந்த அறிவியல் நிறைவைக் கொண்டாடவே இந்த நிகழ்வு” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி மலிவு விலையிலும், ₹ 200-400 வரையிலும் கிடைக்கும். இருப்பினும், இறுதி விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை”. இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று பூனவல்லா கூறினார்.

முதலில் இந்த தடுப்பூசி அரசு வழியே கிடைக்கும் என்றும், அடுத்த ஆண்டு முதல் சில தனியார் பங்குதாரர்களும் இதில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தடுப்பூசியை  முதல்கட்டமாக 200 மில்லியன் டோஸ் தயாரிக்கும் திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், முதலில் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் என்றும், அதன்பிறகுதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும்  பூனவல்லா கூறினார்.

இந்த தடுப்பூசிக்காக நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றதாக பயோடெக்னாலஜி துறை செயலாளர் ராஜேஷ் கோகலே தெரிவித்தார். “அத்தகைய ஆராய்ச்சியில் தனியார்-பொது நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மை மிகவும் முக்கியமானதாகி வருகிறது, இந்த இணை உருவாக்கம் தான் உலகில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தப் போகிறது” என்று அவர் கூறினார்.

CSIR இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் என் கலைச்செல்வி, இது இந்த துறையில் முதல் படி மற்றும் ஆராய்ச்சி என்றும், இது மேலும் தொடரும் என்றவர்,  “இந்த அரசாங்கம் இந்த வகையான கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு அக்கறை எடுத்து, எங்களை ‘ஆத்மநிர்பர்’ ஆக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.