சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் +2 படிக்கும் மூன்று மாணவர்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் தொடர்ந்து தகாத முறையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாகப் பாடம் நடத்தும்போது தொந்தரவு செய்வது, அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வகுப்பறையில் சென்று உட்கார்ந்து… அங்குள்ள ஆசிரியர்களைக் கிண்டல் செய்வது என்று தொடர்ந்து பல்வேறு செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியரும் அந்த மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறார். இதனையடுத்து அந்த மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். மேலும், ஆசிரியர்கள் சிலர் கழிவறைக்குச் சென்றபோது அவர்களை உள்ள வைத்து வெளியே கதவை மூடியிருக்கிறார்கள்.
மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆலோசனையின்படி, ஆய்வாளர் காதர்மீரான் மாணவர்கள்மீதான புகாரை ராயபுரம் குழந்தைகள் நல அலுவலருக்கு அனுப்பிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட அந்த மூன்று மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அந்த மூன்று மாணவர்களும் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.