சான் பிரான்சிஸ்கோ: 280 கேரக்டரில் கருத்துகளை பகிர உதவுகிறது சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர். இதில் ஒரு முறை பதிவிட்ட ட்வீட்களை திருத்த (எடிட்) முடியாது. பிழை இருந்தால் டெலீட் (நீக்குவது) செய்வது மட்டுமே இப்போது இதன் பயனர்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன். அதன் காரணமாக ட்வீட்களை திருத்தும் எடிட் பட்டன் ஆப்ஷன் வேண்டும் என்பது ட்விட்டர் தள பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இப்போது அந்த அம்சத்தை ட்விட்டர் சோதித்து வருகிறதாம்.
இந்த அம்சம் வரும் நாட்களில் கட்டண சந்தா அடிப்படையில் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்து ஒரு ட்வீட்டும் செய்துள்ளது ட்விட்டர். “நீங்கள் எடிட் செய்யப்பட்ட ட்வீட்டை பார்க்க நேர்ந்தால் அது நாங்கள் எடிட் பட்டனை சோதித்து வருவதால்தான். அதற்கான வேலை நடக்கிறது” என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்த அம்சம் அந்நிறுவனத்திற்குள் சோதனையில் உள்ளதாம். இதன் மூலம் ஒரு ட்வீட்டை பயனர் பகிர்ந்த 30 நிமிடங்களில் சில முறை எடிட் செய்யலாம் என தெரிகிறது. எடிட் செய்யப்பட்ட ட்வீட் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நேரமும் அதில் இருக்குமாம். அதில் உள்ள லேபிளில் பயனர்கள் கிளிக் செய்தால் அந்த ட்வீட்டின் முந்தைய வெர்ஷன் மற்றும் ஹிஸ்டரியை பார்க்க முடியுமாம்.
if you see an edited Tweet it’s because we’re testing the edit button
this is happening and you’ll be okay
— Twitter (@Twitter) September 1, 2022
இந்த அம்சம் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே முதலில் அறிமுகமாகும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் ப்ளூ அக்சஸ் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ப்ளூ பயனர்கள் போஸ்ட் செய்யும் ட்வீட் ஒரு நிமிடம் வரையில் ரிவ்யூ செய்வதற்காக ஹோல்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தவறாக ட்வீட் செய்தால் அதனை Undo செய்து கொள்ளலாம்.