“8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்” – வானதி சீனிவாசன்

கோவை: “எதிர்கட்சியாக இருந்தபோது அரசியல் ஆதாயத்திற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்கியதற்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கோர வேண்டும்” என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரும் வரை நான்கரை ஆண்டுகள், தமிழகமே போராட்டகளமாக இருந்தது. இயற்கை எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம், எரியாயு குழாய் பதிக்கும் திட்டம், மின் பாதை அமைக்கும் திட்டம், மேம்பாலங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் என்று மத்திய, மாநில அரசுகளின் எந்த வளர்ச்சித் திட்டங்களாக இருந்தாலும் அவற்றை எதிர்ப்பது, அவற்றுக்கு எதிரான அவதூறான செய்திகளை பரப்பி பொதுமக்கள், விவசாயிகளிடம் அச்சத்தை விதைப்பதுதான் போராளி அவதாரம் எடுத்தவர்களின் நோக்கமாக இருந்தது. அதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி, திமுக அரசியல் ஆதாயம் அடைந்தது.

நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத்திய, மாநில அரசுகள் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கெதிராக போராட்டங்களை நடத்திய, திடீர் போராளிகள், 2021 மே 7-ம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் காணாமல் போய்விட்டார்கள். டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல்களைப் பாடி புரட்சி செய்த, ஒரு புரட்சியாளர் இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த திமுக, பல்வேறு குறுங்குழுக்களையும், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களையும் தூண்டிவிட்டு, அந்த திட்டத்தையே முடக்கியது. இப்போது திமுக ஆட்சியில் இருப்பதால், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முனைகிறார்கள்.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒரு படி மேலே போய், “சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றுதான் சொன்னோம்” என்கிறார். ஆனால், இது தகவல் தொழில்நுட்ப யுகம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், எட்டு வழிச்சாலைக்கு எதிராக பேசியதை எல்லாம், சமூக ஊடகங்களில் பொதுமக்களே அம்பலப்படுத்தியுள்ளனர்.

இப்படி, திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களை முடக்க, பல்வேறு தரப்பினரை தூண்டுவிட்டு, திமுக நடத்திய சதித் திட்டங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இனி மக்களிடம் இருந்து திமுக தப்பிக்க முடியாது. வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருந்ததற்காக மக்களிடம் திமுக மன்னிப்பு கோர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.