ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராமரிப்பிற்காக மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன் கோவில் மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக, ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை, (வியாழக்கிழமைகள் தவிர) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் கால தாமதமாகவும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 3ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை, (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) சிவகங்கை – மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால், செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை, செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப் பகுதியில் , செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இணைப்பு ரயிலாக செயல்படாது.
மேலும் ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை, (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) மற்ற நாட்களில் முழுமையாகவே ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 14, 15 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் ஆகியவை, திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM