சென்னை: தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரிக்க காரணம் மத்திய அரசு தான், போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் தமிழக அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதை பொருளை அழிக்க முடியாது என்றும் தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரிக்க முழுக்க முழுக்க காரணம் மத்திய அரசு தான் என தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய மாநிலமாக குஜராத் தான் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் தனியார் மையமாக மாற்றப்பட்டு உள்ள துறைமுகங்கள் மூலமாக தான் கடத்தப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தாலும் குஜராத்தில் உள்ள தனியார் மையமாக மாற்றப்பட்டு உள்ள துறைமுகம் மூலம் தான் அதிக அளவில் கடத்தபடுகின்றன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
எனவே இந்தியாவில் முழுமையாக துறைமுகங்களை அரசு மையமாக மாற்றி இந்த கடத்தலை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் இந்தியாவில் முழுமையாக போதை பொருட்களை ஒழிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகள் கூறியும் தற்போது வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கு விஜயவாடாவில் இருந்தும் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர் தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9.19 கோடி மதிப்பீட்டிலான 152.94 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டு உள்ளதாவும், 240 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 32.99 கோடி மதிப்பீட்டிலான 952 டன் போதை பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டு இருந்ததாக கூறிய அவர் சட்டப்பேரவையில் குட்கா குறித்து பேசியதற்கு வெளியேற்றிய நபர்கள் தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து உள்ளது என பேசுகின்றனர் என தெரிவித்தார்.
மதுரை விவகாரத்தில் அந்த ஆடியோ உண்மையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு நபர்களின் கொள்கை சார்ந்தது என்றும் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளித்தது அண்ணா தற்போதும் விடுமுறை அளித்து வருகிறோம் எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் அனைத்து சாதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம் என தெரிவித்தார்.
திமுகவில் முதல் பட்டதாரி யாரேனும் இருக்கிறார்களா என அண்ணாமலை கேட்கிறார் அண்ணா முதல் பட்டதாரி என்பதை அண்ணாமலை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் நானும் முதல் பட்டதாரி தான் என தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம் அதனை தெளிவாக முதல்வர் துணை வேந்தர் மாநாட்டில் தெளிவாக கூறிவிட்டார் என தெரிவித்து விட்டார் என கூறினார்.