விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது தவறு. இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால் எந்த மத பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு பி.டி.ஆர் இல்லை அண்ணாமலையும், பிஜேபியும் தான் மிகப்பெரிய சாபக்கேடு என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் பூலித்தேவன் பிறந்தநாளும், தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், புலிதேவன் நினைவை போற்றும் இந்நாளில் அவர் எதற்காக எந்த நோக்கத்திற்காக வீரதீரமாக போரிட்டாரோ, அதற்கு நாங்கள் அவரின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து அரசியல் களத்தில் போராடுவோம் என்ற உறுதியை ஏற்றுள்ளோம்.
எளிய மக்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போனதால், அதன் காயத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டார் தங்கை அனிதா. அவர் பற்றவைத்த நெருப்பு இன்றும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது தொடர்ந்து நீட் தேர்வினால் ஏற்படும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவள் உயிர் கொடுத்தும் அவளின் கனவு இன்று வரை நிறைவேறவில்லை நாங்கள் அவரது கனவை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இனிமேல் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டாலும் பயனளிக்காது. தீர்ப்பை முன்னதாகவே வழங்கியது போல் இருக்கிறது என கூறியவர் இந்த தீர்ப்பு முற்றிலும் தவறு நீதியரசர் இது போல் நடக்ககூடாது என பேசினார்.
எட்டு வழி சாலையை திமுக தற்போது ஆதரிக்கிறது. கடந்த ஆட்சியில் ஏன் எதிர்த்தார்கள். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கு அன்று எதிர்த்து பேசினார் என முதலமைச்சர் முக ஸ்டாலின் போன்று பேசி கட்டினார். மேலும் பணத்திற்காக பிசாசு போன்று மாறிவிட்டனர் என விமர்சித்தார்.
தொடர்ந்து தமிழகத்தின் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினாலும் பாஜகவின் கொடியை வைப்பதற்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்?? என்று கேட்ட அவர், இஸ்லாமிய மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை ஆனால் ஆர்எஸ்எஸ் நினைத்த இடத்தில் கூட்டத்தை நடத்துகிறார்கள், கொடியை ஏற்றுகிறார்கள். பள்ளிகளில் கூட கதவை மூடி வைத்துக் கொண்டு வகுப்பு எடுக்கிறார்கள். இதற்கெல்லாம் திமுக அரசு அனுமதி அளிக்கும். ஆனால் நாங்கள் ஒரு கொடியை சுதந்திரமாக ஏற்றுவதற்கு எங்களுக்கு அனுமதி மருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது ஏனென்று பாஜக கேட்ட கேள்வி சரிதான். ரம்ஜானுக்கும் ,கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் இந்துகளின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது தவறு என்று கூறினார். மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் எந்த மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க கூடாது என கூறினார்.
பழனிவேல் தியாகராஜனை அண்ணாமலை அநாகரிமாக பேசியது தவறு. அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் ஒரு திமுக வேட்பாளர் இருக்கிறார் என்றால், அது பழனிவேல் தியாகராஜன் மட்டும் தான். அவர் தனித்துவமாக செயல்படுபவர். அண்ணாமலை ஒரு படித்த நபர் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது. மேலும் தமிழ்நாட்டிற்கு பி டி ஆர் சாபக்கேடு கிடையாது அண்ணாமலையும், ஆர் எஸ்.எஸ் மற்றும் பாஜக தான் தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு என கூறினார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு கொடுக்கும் முக்கியதுவம் ஏன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு கொடுக்கப்படவில்லை, குறைந்த பட்சம் அறிக்கையை வெளியிடவாவது செய்திருக்கலாம் என்றார்.
அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கை விசாரிப்போம் என்று கூறியிருந்தனர், அதில் ஐந்து நபர்கள் இறந்துள்ளனர் அது குறித்தும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பாஜக அரசு அனைத்தையும் அம்பானி, அதானிக்கு தான் கொடுக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக பரந்தூர் விமான நிலையத்தை அரசு கட்டி முடித்த பிறகு அதானிக்கு தான் கொடுக்கும் என கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM