சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் அமக்கப்பட்டுள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சுவராஜ்’ என்ற பெயரில் 75 வார நிகழ்ச்சி 8 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இதில் பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பற்றிய சுதந்திரப் போராட்டம் தொடர்பான சரித்திர நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகிறது என்றார்.
முன்னதாக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், 2047இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் நிலையில், நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், அந்த வகையில் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை வரவேற்பதாக கூறினார்.
மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைவருக்கும் வீடு திட்டம், ஜல்ஜீவன் மிஷின் திட்டம் ஆகிய பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்று காலை தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் திருஉருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.