ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகேயுள்ள பாம்பாறு அணை மதகின் இரும்பு கயிறு அறுந்து கதவு திறக்கப்பட்டதால் நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை 1983ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 587 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணை மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 4000 ஏக்கர் பாசன விவசாயிகள் பயனடை கின்றனர். இதுவரை இந்த அணை 13 முறை நிரம்பி உள்ளது.
பெணுகொண்டாபுரம் உபரி நீர், ஜவ்வாது மலை, திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணை உபரிநீர் ஆகியவை இந்த அணையின் நீர்வரத்து ஆதாரங்களாகும்.
கடந்த சில மாதங்களாகவே ஊத்தங்கரை பகுதியில் கனமழை பெய்தது. இதனால், பாம்பாறு அணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அணையின் உபரிநீர் ஐந்து மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து 5,400 கனஅடியாக இருந்த நிலையில் அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த நீர் சாத்தனூர் அணையை சென்றடைகிறது.
இதனிடையே நேற்று நள்ளிரவு நான்காவது மதகில் ரோப் பேரிங் பழுதால் இரும்பு கயிறு துண்டானது. இதில் நான்காவது மதகில் இருந்த இரும்பு கதவு திறந்தது. இதனால் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறியது. மீன்பிடி வலைகள், பல ரகமான மீன்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர், காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கதவு திறந்து தண்ணீர் வெளியேறும் தகவல் அறிந்து அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது சிலர் அங்கு செல்பி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பாம்பாறு அணையின் நான்காவது மதகில் ரோப் பேரிங் பழுது காரணமாக இரும்பு கயிறு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு கயிறு துண்டித்து கதவு திறந்தது. இதனால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் ரோப் பேரிங் பழுது நீக்கப்பட்டு பணிகள் முழுமையாக நிறைவடையும். விரைவில் சரி செய்யப்படும் என்றனர்.
பாம்பாறு அணையில் கட்லா, ரூபி, மிர்கால், ஜிலேபி, கொட்லா உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் மேலான மீன்கள் தண்ணீரில் அடித்து வரப்படும். இதற்காக மீனவர்கள் அந்த பகுதியில் நிரந்தரமாக வலைகளை கட்டி வைத்து மீன்களை பிடிப்பது வழக்கம். இதனிடையே நேற்று நள்ளிரவு ரோப் பேரிங் பழுதால் இரும்பு கயிறு துண்டாகி கதவு திறந்ததால் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 16 யூனிட் வலைகள் மற்றும் அதில் சிக்கியிருந்த மீன்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்த வலைகளின் மதிப்பு 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை நம்பியிருந்த 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. வருடந்தோறும் கதவு பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்வதில்லை என மீனவர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.