மதுரை: மழை காரணமாக மதுரை மல்லிகைப்பூ உற்பத்தி குறைந்ததால், அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், இன்று விழாக்காலம் இல்லாமலே மல்லிகைப்பூ ரூ.1,700 விற்பனையானது.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமான மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் உற்பத்தியாகக் கூடிய மல்லிகைப்பூவுக்கு நல்ல மனமும், நிறமும் உண்டு. கடந்த காலத்தில் மலர் சந்தைகளுக்கு டன் கணக்கில் வந்த இந்த பூக்கள், தற்போது ஒரு டன், 2 டன் மட்டுமே அதிகப்பட்சமாக வருகிறது. அதனால், மதுரை மல்லிகைப் பூக்களுக்கு நிரந்தரமாக தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு ஒன்றரை டன் மல்லிகைப்பூ மட்டுமே வந்தது. வரத்து குறைவதால் கிலோ ரூ.1500 முதல் ரூ.1700 வரை விற்பனையானது.
மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ஷாஜகான் கூறுகையில், ”மல்லிகைப்பூ மட்டுமில்லாது மற்ற பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது. முல்லைப்பூ ரூ.1000, பிச்சிப்பூ ரூ.1000க்கு விற்பனை ஆனது. மழையே பூக்கள் வரத்து குறைவிற்கு முக்கிய காரணம். மழைக்கு மொட்டுகள் உதிர்ந்து விழுந்ததாலும், செடிகளில் இருந்த பூக்கள் அழுகியதாலும் உற்பத்தி குறைந்தது. அதனால், இந்த சீசனில் மாட்டுத்தாவணி சந்தைக்கு வரக்கூடிய பூக்கள் 50 சதவீதம் குறைந்தது.
கரோனாவால் ஏற்கெனவே பெரும்பாலான மல்லிகைப்பூ தோட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்தன. அதிலிருந்து தப்பிய தோட்டங்களில் இருந்து மட்டுமே தற்போது சந்தைகளுக்கு பூக்கள் வருகின்றன. அதுவும் மழையால் அழிந்ததால் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்றார்.