பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜியாக இருந்தவர் கே.வி.சீனிவாசன். இவர்மீது பி.ஏ.சி.எல், பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் நடந்த பதிவு முறைகேடு ஆகியவை குறித்து அறப்போர் இயக்கம் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது. அதனடிப்படையில் கே.வி.சீனிவாசன் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பி.ஏ.சி.எல் நிறுவன நில விவகாரத்தில் கே.வி.சீனிவாசன்-மீது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழுழிப்புத்துறை போலீஸார் கடந்த 24.8.2022-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர். 9 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கையில் கே.வி.சீனிவாசன், அவருக்கு வேண்டப்பட்ட ஆவண எழுத்தர், புரோக்கர், பதிவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் உள்ளன.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் பேசினோம். “சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வரதராஜ் என்பவர், தமிழக முதன்மை செயலாளருக்கும் சி.பி.ஐ-க்கும் அனுப்பிய புகாரின் அடிப்படையில் சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் கூடுதல் ஐ.ஜி-யாக பணியாற்றிய கே.வி.சீனிவாசன்-மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். வரதராஜ் கொடுத்த புகாரில், பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெற்ற பி.ஏ.சி.எல் நிறுவனம் 49 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களை ஏமாற்றியது. அதனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை விற்று அதை 6 கோடி முதலீட்டாளர்களுக்கு பணமாக திரும்ப கொடுக்க நீதிமன்ற உத்தரவின்பேரில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களை விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களை தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அதற்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் கொடுத்தார்.
குறிப்பாக மதுரை பதிவு மாவட்டத்தில் பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடம், கடந்த 2013-ம் ஆண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பெண்டிங் வைக்கப்பட்டிருந்தது. அதை பதிவுசெய்ய கூடுதல் ஐ.ஜி கே.வி.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளோம். இந்த முறைகேட்டிற்கு கே.வி.சீனிவாசனுக்கு சில பதிவுத்துறை அலுவலர்களும் உதவி செய்துள்ளனர். மேலும் பதிவுத்துறை அலுவலகத்தில் ஏஜென்ட்டுகள் சிலரும் வந்து சென்ற சி.சி.டி.வி பதிவுகளும் உள்ளன. இந்த முதல் தகவல் அறிக்கையில் பதிவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
புகாரளித்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வரதராஜியிடம் பேசினோம். “கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சி.பி.ஐ-க்கும் தமிழக முதன்மை செயலாளருக்கும் பி.ஏ.சி.எல் இடத்தை முறைகேடாக பதிவுசெய்வது தொடர்பாக புகார் அனுப்பியிருந்தேன். பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் இடங்களை பதிவு செய்யக்கூடாது என்று சி.பி.ஐ கடந்த 2016-ம் ஆண்டே 870 பக்கங்களைக் கொண்ட கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. லோதா கமிட்டியும் பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் நீதிமன்றத்தில் கஸ்டடியில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி மதுரையில் பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி-யாக இருந்த கே.வி.சீனிவாசன், அந்த இடத்தை பதிவு செய்வதற்காக தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம், கே.வி.சீனிவாசனின் அலுவலகத்துக்கு வந்த ஏஜென்ட்டுகளின் சி.சி.டி.வி. பதிவு உள்ளிட்ட ஆதாரங்களோடுதான் புகாரை அனுப்பினேன். அதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. சுமார் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. இதுதவிர விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பி.ஏ.சி.எல் நிறுவன இடங்கள் பதிவு செய்து முறைகேடு நடந்திருக்கிறது. அதில் தொடர்புடைய அதிகாரிகள்மீது சந்தேகம் இருப்பதாக சிலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளோம். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையில் முழு விவரம் தெரியவரும்” என்றார்.
பதிவுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது “தென்மாவட்டங்களில்தான் பி.ஏ.சி.எல் நில பதிவு முறைகேடுகள் அதிகளவில் நடந்தன. அதன்அடிப்படையில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள், 30-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கூடுதல் பதிவுத்துறை தலைவர் கே.வி.சீனிவாசன்-மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.