ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் ஏராளமான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. சதி வேலை காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் அனைத்து ஏரிகளிலும் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டது.
ஏலம் எடுத்தவர்கள் ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து, பின்னர் மீன்களை பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அம்மையப்பன் நகரில் உள்ள பெரிய ஏரி வழியாக சிலர் நடந்து சென்றனர். அப்போது ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா, துணைத்தலைவர் நிர்மலா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஏரிக்கு வந்து செத்து மிதந்த மீன்களை பார்த்தனர். அவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசாரும் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
மீன்கள் இறந்தது எப்படி? மர்ம நபர்களின் சதி வேலை காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் ஏரியின் தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்காக வேலூர் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சில்கூர் ஏரியில் சுமார் ₹1 லட்சம் மதிப்பிலான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தது குறிப்பிடத்தக்கது.