திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகேயுள்ள கூட்டத்தூர் என்ற சிறிய கிராமத்தில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க. மோகன்காந்தி தலைமையில், வணிகவியல் பேராசிரியர் ராஜ்குமார், காணிநிலம் மு. முனசாமி மற்றும் ஆய்வு மாணவர்கள் கொண்ட குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் களஆய்வு நடத்தி வருகின்றனர். அந்தவகையில், திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் களஆய்வு நடத்திய போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் தொடர்ச்சியாக இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து பேராசிரியர் முனைவர் க. மோகன்காந்தி ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, வேலூர் மாவட்டம் அமர்தியில் தொடங்கி போளூர், செங்கம், ஆலங்காயம் வட்டங்களில் பரவி சிங்காரப்பேட்டையில் முடிவடைகிறது. ஏறத்தாழ 250 கி.மீ., சுற்றளவு கொண்ட இந்த மலையில் சுமார் 420 மலைக்கிராமங்களில் 2.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மலையானது பல்வேறு வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
குறிப்பாக ஏராளமான பாறை ஓவியங்கள், கற்கோடாரிகள், கற்திட்டைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், ஏராளமான நடுகற்கள் இந்த மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகேயுள்ள கூட்டத்தூர் என்ற சிறிய கிராமத்தில் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த கூட்டாத்தூரில் உள்ள ஏரிக்கு மேல் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும், 4 நடுகற்களும் இருப்பதை கண்டெடுத்துள்ளோம். கொற்றவை சிலையை, ஆநிரை கவர்தல், நாட்டை பிடிக்கும் போரில் வெற்றி பெற வேண்டி கொற்றவையைப் போர் மறவர்கள் வணங்குவது மரபு.
அந்தவகையில், பல்லவர் காலத்து கலை நுணுக்கத்துடன் இந்த கொற்றவை சிலை அமைந்துள்ளது. இச்சிலையானது 37 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்ட பலகைக் கல்லில் அமைந்துள்ளது. இதில், உள்ள எழுத்துப் பொறிப்புகள் சிதைந்துள்ளதால் அவைகளை முழுமையாக படிக்க முடியவில்லை.
சிலையில் வலதுபக்கம் முடிக்கப்பட் கொண்டையுடனும், இடது கையை இடுப்பில் ஊன்றியும், வலது கையில் கத்தியை தாங்கியும் உள்ளது. இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் மண்ணில் ஆழமாக புதைந்துள்ளது. 2-வது நடுக்கல் 2 -ஆக உடைந்துள்ளது. இந்த கல்லானது 37 அங்கலமும் உயரமும், 28 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது.
நடுகல் வீரனின் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் உள்ளது. இந்த நடுகல்லிலும் எழுத்துப் பொறிப்புகள் சிதைந்த நிலையிலேயே காட்சித் தருகின்றன. 3-வது நடுக்கல்லானது 40 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. இதில் உள்ள வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் கொண்டுள்ளது.
5-வது நடுகல்லானது 50 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. இதில் உள்ள வீரன் வலது பக்க கொண்டையுடன், வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லுடன் காட்சி தருகிறார். இந்த வீரனின் கழுத்துப்பகுதியில் ஒரு அம்பும், வயிற்றுப்பகுதியில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளதைப் போல காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை.
இந்த 5 நடுகற்களுக்கு அருகே கூடுதலாக 2 நடுகற்கள் உள்ளன. அதில், முதல் நடுகல் 5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வீரன் தனது 2 கைகளால் இரண்டு மாடுகளை பிடித்துக்கொண்டுள்ளதை போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு நடுகல் 2-ஆக உடைந்துள்து. அதில் ஒரு பாகம் மட்டுமே காண முடிந்தது. இந்த நடுகற்கள் விஜயநகர காலத்தைச் சேர்ந்த உடன்கட்டை நடுகல்லாகும். இந்த அரிய வகை நடுகற்களை ஆய்வு செய்தால் மேலும் கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் நடுகற்களை ஆய்வுப்படுத்த முன்வர வேண்டும்’’ என்றார்.