ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை; குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு:

பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

குமாரசாமி பார்வையிட்டார்

ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் பெய்த மழை காரணமாக, அந்த தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில், சன்னப்பட்டணாவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். மக்களிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மோடி பெயரை பயன்படுத்தி…

சன்னப்பட்டணாவில் மழை பாதிப்பு ஏற்படுவதற்கு பெங்களூரு-மைசூரு இடையே நடைபெற்று வரும் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூரு நகரில் மழை பாதிப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதற்கு ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்று பிரதாப் சிம்ஹாவுக்கு தெரியவில்லையா?.

அவர் என்ன பெரிய என்ஜினீயரா?. பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி எம்.பி. ஆனவர் பிரதாப் சிம்ஹா. அவர் கஷ்டப்பட்டு அந்த பதவிக்கு வரவில்லை. பிரதாப் சிம்ஹாவிடம் இருந்து நான் அரசியல் பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை.

பயன் இல்லை

பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்குவதற்கு, தரமற்ற பணிகளே காரணம். பிரதமர் மோடி மங்களூருவுக்கு அரசியல் மற்றும் தேர்தலுக்காக வருகிறார். அதனால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் இல்லை. 2019-ம் ஆண்டில் இருந்து மழையால் ரூ.35 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திற்கு மத்திய அரசு வெறும் ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால், அரசியல் காரணங்களுக்காக பிரதமர் கர்நாடகம் வருகிறார். காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு பாதிப்பு தான் ஏற்படுமே தவிர, எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

இவ்வாறு குமாசாமி கூறினார்.

ராஜகால்வாய்…

இதையடுத்து பெங்களூருவுக்கு வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் சாதாரண மழை பெய்தாலே அடுக்குமாடி குடியிருப்புகளிலும், வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்து பெரும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ராஜகால்வாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தான். எனவே ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.