தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளை சுற்றி தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்தவகையில், வைகை அணையை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதையொட்டி, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ள நீர், சிம்மக்கல், யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. அதன் இருபுறமும் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக மதுரை நகரில் முக்கிய பாலங்கள் மற்றும் வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரையோரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர்மழை காரணமாக நீர் நிலைகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
மேலும் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4006 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil