சென்னை: இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, பொறியாளர் எம்.விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினமான செப்.15-ம் தேதியை ‘பொறியாளர் தினமாக’ கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரும் ‘பாரத ரத்னா’ விருது பெற்றவருமான சர் எம்.விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினமான செப்.15-ம் தேதியை, ‘பொறியாளர் தினமாக’க் கொண்டாட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பு (ஐஎன்டிஇஎஃப்) கோரிக்கை விடுத்தது.
கோரிக்கை ஏற்பு
இதை ஏற்ற மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், விஷ்வேஸ் வரய்யாவின் பிறந்த தினமான செப்.15-ம் தேதியை ‘பொறியாளர் தினமாக’ கொண்டாட முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், மத்திய, மாநில பொதுப்பணித் துறைகள், இதர மத்திய நிதி நல்கை திட்டங்களை செயல்படுத்தும் துறைகள், அனைத்து மாநில பல்வேறு துறைகளின் தலைமைப் பொறியாளர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாண் இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளது.
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
அக்கடிதத்தில், செப்.15-ம் தேதியை ‘பொறியாளர் தின’மாகக் கொண்டாடுவதை குறிப்பிட்டு, அன்றைய தினம் கருத்தரங்கங்கள் நடத்துதல், தகவல் தொடர்பு திறன்களை ஊக்குவித்தல், தொழில்நுட்பம் குறித்த விரிவுரைகள் ஏற்பாடு செய்தல், பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் சாதனை படைத்த பொறியாளர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மேலும், அனைத்து தரப்பினருக்கும் ‘பொறியாளர் தினத்தை’கொண்டாடத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.