புதுடெல்லி: லிபியா தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்து வரும் துருக்கிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருஷிரா காம்போஜ் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறது. இது, இருநாட்டு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வரும் தீர்மானங்களில் துருக்கி காட்டி வரும் அப்பட்டமான அலட்சியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விதிமீறல் நடவடிக்கை மோசமான விளைவுகளுக்கு காரணமாக உள்ளது. கடந்த 2020-ல் செய்துகொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக துருக்கியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மேலும், இது நீடித்த அரசியல் முட்டுக்கட்டையில் மேலும் பல பாதகமான விளைவுகளை உருவாக்கி வருகிறது என்றார்.