சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் செப்.2, 3-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், செப்.4, 5-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
2, 3-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 4, 5-ம் தேதிகளில் மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும்.
சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
செப்.2-ம் தேதி குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
88 சதவீதம் அதிகம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பருவமழை காலத்தில் ஜூன் 1 முதல் ஆக.1 வரை வழக்கமாக 21 செமீ மழை பெய்யும். ஆனால் 40 செமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 88 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 292 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 18 மாவட்டங்களில் 100 சதவீதத்துக்கு மேலும், 4 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாகவும் மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட 93 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஏற்கெனவே 1906-ம் ஆண்டில் 112 சதவீதம், 1909-ம் ஆண்டு 127 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.