அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது. இதனால் அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 80 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒற்றைத் தலைமை கோஷம் அதிமுகவுக்குள் முன்வைக்கப்பட்டதிலிருந்து ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு இரு அணிகளாக பிரிந்து நின்று வார்த்தைகளால் மோதி வருகிறது. கட்சியிலிருந்து இந்த அணியில் இருப்பவர்களை அந்த அணியில் இருப்பவர்கள் நீக்குவதும், அந்த அணியில் இருப்பவர்களை இவர்கள் நீக்குவதும் தொடர்ந்து வந்தது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுக்குழு செல்லாது என அறிவித்ததோடு ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தார்.
அதன்பின்னர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு குஷியானது, அவரை நோக்கி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆதரவளிக்க வந்த வண்ணம் உள்ளனர்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்தார். அதன் இறுதி விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்போடு இனி இணைந்து செயல்பட முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
இந்த தீர்ப்பை அதிமுகவில் உள்ள அத்தனை பேரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதிமுகவுக்குள் தற்போது நடைபெறும் மோதல்களில் யார் பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் இருப்பவர்கள் இந்த தீர்ப்பை பொறுத்து எந்த பாதையில் செல்வது என வழியை அமைத்துக் கொள்வார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தீர்ப்பை முன்னிட்டு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உதவி ஆணையர் தலைமையில் 80 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை பொறுத்து மேலும் போலீஸார் அதிகர்க்கப்படலாம்.