கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக வடிவமைக்கப்பட்ட கடற்படை கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று மாலை கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடியை, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், காலடி கிராமத்தில் உள்ள ஆதிசங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதிசங்கரர் ஜென்ம பூமிக்கு சென்று பிரதமர் வழிபட்டார். அதைத் தொடர்ந்து கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார். கடற்படை கொடியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்படுகிறது. புதிய வெள்ளைக் கொடியில், தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய கடற்படையில் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961 முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியது. 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், 2002 முதல் 2012-ம் ஆண்டு வரை அருங்காட்சியகமாக இருந்தது. அதன்பிறகு பயனற்ற நிலைக்கு சென்றதால், கடந்த 2014-15-ல் இந்தக் கப்பல் உடைக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய கடற்படையில் அதே பெயரில் புதிய விமானம் தாங்கி கப்பலை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உள்நாட்டிலேயே அத்தகைய கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல், கடந்த 2013-ம் ஆண்டு கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. கப்பலில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், சமீபத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில், கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலில் பல நவீன தானியங்கி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 100-க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், ‘பாதுகாப்புத் துறையில், பிரதமரின் தற்சார்பு இந்தியா கொள்கைக்கு சிறந்த உதாரணமாக புதிய விக்ராந்த் ஐஎன்எஸ் கப்பல் இருக்கிறது’ என தெரிவித்துள்ளது.
கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.என்.கார்மேட் கூறும்போது, “புதிய கப்பலில், கடற்படை போர் விமானங்களை ஏற்றி இறக்கும் பரிசோதனை, வரும் நவம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடையும். முதல் சில ஆண்டுகளுக்கு இந்த கப்பலில் மிக்-29கே ரக போர் விமானங்கள் இயக்கப்படும்” என்றார். கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் சேர்க்கப்படுவது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு கொள்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்தின் சிறப்பு
புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40 ஆயிரம் டன்கள். கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் இருப்பார்கள். 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது.