சென்னை: சதுர்த்தி அன்று வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் சென்று கரைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால்அறிவுறுத்தியுள்ளார். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க காவல் துறை சார்பில் தனித்தனி வழித்தடம்வரையறுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் 1,352 விநாயகர் சிலைகள், ஆவடி காவல் சரகத்தில் 503 சிலைகள், தாம்பரம் காவல் சரகத்தில் 699 சிலைகள் என மொத்தம் 2,554 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
விநாயகர் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதித்த நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றுகரைக்க வேண்டும். ஊர்வலப் பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது உட்படபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சென்னை பெருநகரில் 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆவடியில் 3,500 போலீஸார் மற்றும் 300ஊர்க்காவல் படையினர், தாம்பரத்தில் 3,300 போலீஸார் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 21,800 போலீஸார், 2,650 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், சென்னை காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் சிலைகளை கரைக்க 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கரைக்க அனுமதிவழங்கப்பட்டு அதற்கான சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் தாம்பரம், ஆவடிகாவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கவும் தனித்தனி வழித்தடம் வரையறுத்து கொடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் அமைதியாக வழிபாடுகளை செய்யவும், அமைதியான முறையில் ஊர்வலமாக கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட கரைப்பிடங்களில் கரைக்கவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வழிபாடு இடங்கள், ஊர்வலப் பாதைகள், சிலைகளை கரைக்கும் இடங்களில், காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.