திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் ஸ்ரீமட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இங்கு விநாயகர், மலையின் மேல் உச்சிப்பிள்ளையாராகவும், மலையின் கீழ் மாணிக்க விநாயகராகவும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில் மடப்பள்ளியில் தலா 75 கிலோ எடை கொண்ட 2 கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதில் ஒரு கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கு படையல் செய்யப்பட்டது.
மற்றொரு கொழுக்கட்டையை வெள்ளைத் துணியில் வைத்து மூங்கில் கம்பில் கட்டி படிகள் வழியாக சுமந்து சென்று மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு படையல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
முன்னதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.