‘ஆன்மிகம் என்பது நம்மை மட்டும் சார்ந்ததாக நிச்சயம் கிடையாது.. நான் என்றைக்குமே எனக்காக மட்டும் வேண்டிக் கொண்டதில்லை. எல்லாருக்காகவும் வேண்டிப்பேன்!’ எனப் புன்னகைத்தார், ‘காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான சரண்யா. இவர் தன் வாழ்வில் திருத்தணி முருகன் நிகழ்த்திய ஒரு அற்புதத்தையும் தன் வீட்டு பூஜை அறை பொக்கிஷம் குறித்தும் நம்மோடு பேசினார்.
“திருத்தணி முருகன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சில ஆண்டுகளுக்கு முன்பு என் கையில் அலர்ஜி காரணமாகப் பெரிய காயம் மாதிரி வந்தது. என் நண்பர்கள் எல்லாருக்கும் அது தெரியும். அது ஒரு வகையான தோல் நோய். 2018 லிருந்து 2019 வரை அதற்காக நான் எடுத்துக் கொள்ளாத மருந்துகளே இல்லை. அது அப்படியே கை மூட்டுவரை பரவ ஆரம்பிச்சது. நான் ஒரு நடிகை. என் முகத்தையும், உடலையும் எவ்வளவு சுத்தமா வச்சுக்கிறேனோ அந்த அளவுக்குதான் சினிமா வாய்ப்புகள் வரும். டாக்டர்ஸ் இது எப்ப வேணும்னாலும் இந்தக் காயம் உங்க முகம் முழுவதுமே வரக்கூடும்னு சொன்னாங்க.
என் நண்பர்கள் என்னை ஒதுக்கி வச்சுடுவாங்களோன்னு பயந்து அவங்ககிட்ட கூட இதை நான் சொல்லல. விகடனில் யோகிபாபு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், ‘எல்லா நல்ல விஷயத்துக்கும் நான் திருத்தணிக்கு போவேன்’ன்னு சொல்லியிருந்ததைப் பார்த்தேன். சரி நாமளும் திருத்தணி போயிட்டு வரலாம்னு 75 ரூபாய் டிக்கெட் எடுத்துக் கிளம்பினேன். மொத்தம் 300 ரூபாய் தான் என் கையில் இருந்தது. பத்து ரூபாய்க்கு அங்க உப்பு, மிளகு வாங்கி என் உடம்பு முழுக்க சுத்திப் போட்டுட்டுக் கால்,கை கழுவிட்டு சாமியை கும்பிட்டு வந்தேன். மருந்து வாங்கக் காசு அப்போ இல்லாததனால் மருந்து எதுவும் எடுத்துக்கல. ஒரு 20 நாள் என் உடம்பில் அரிப்பு எதுவுமே இல்ல. ஒன்றரை மாசத்துல என் கையில் இருந்த அந்தக் காயம் மறைஞ்சிருக்கி. அதெல்லாம் எனக்கு ஞாபகத்திலேயே இல்ல. ஒருநாள் எதார்த்தமா பார்த்தப்பதான் இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சது. வெறும் 10 ரூபாய் உப்பும் மிளகும் அந்த அற்புதம் செஞ்சதுன்னு நான் நினைக்கலை. எல்லாம் அந்தத் திருத்தணி முருகன் செய்த திருவிளையாடல்தான்” என்ற சரண்யா தன் வீட்டு பூஜை அறை குறித்து விரிவாகப் பேசினார்.
“நான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடிக்கடி போவேன். அங்க மதுரை மீனாட்சி கிளியுடன் இருக்கிற மாதிரியான சிலையை வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன்” என்றவர் அங்கிருந்த விநாயகர் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“விநாயகர் சதுர்த்தியின் போது மண் பிள்ளையார் வாங்கிட்டு வந்து வீட்டில் பூஜை பண்ணி வெளியில் கொண்டு வந்து வச்சுருவாங்க. கடலில் பெரிய விநாயகர் சிலையைக் கரைக்கும்போது கூடவே இந்த சிலைகளையும் கரைப்பாங்க. என்கிட்ட ஒருத்தர், ‘இப்படியான விநாயகரைக் கொண்டு வந்து வீட்டில் வச்சு வழிபட்டால் நல்லது’ன்னு சொன்னாங்க. பொதுவா திருடிட்டு வந்த பிள்ளையாரைக் கும்பிடுவது நல்லதுன்னு சொல்லுவாங்க. அப்படி நம்மால திருட முடியாது. அதனால், அரச மரத்தடியில் இருந்த விநாயகரைத் தூக்கிட்டு வந்து வழிபட்டுட்டு இருக்கேன். அவருக்கு ‘அரசமர விநாயகர்’னு நானே பேரும் வச்சுட்டேன். அவர் வந்த பிறகு வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு.
பல பேர் சனீஸ்வரரை வீட்டில் வைத்து வழிபடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு அவரைப் பிடிக்கும். நல்லதுன்னாலும் சரி, கெட்டதுன்னாலும் சரி அதன் மூலமாக நான் ஏதோ கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார்னு எடுத்துப்பேன். அதனால் அவருடைய புகைப்படத்தை என் வீட்டு பூஜையறையில் வச்சுருக்கேன்.
பாண்டிச்சேரி மதர் ஆசிரமத்தில் கற்பூரம் வச்சு பார்த்திருக்கேன். அதனால, விருட்சமரம் முன்னாடி கற்பூரம் போட்டு வைப்பேன். கலசம் வச்சு வரலட்சுமி விரதத்துக்காக அலங்காரம் பண்ணி அம்மனுக்குத் தாலி சாத்தினேன். எனக்கும் நல்ல மாப்பிள்ளை வரட்டும்னு வேண்டுக்கிட்டு பூஜை பண்ணினேன்.
பிரசாதமா சக்கரைப் பொங்கல், பாயாசம் வைப்பேன். அதே மாதிரி சிம்பிளாக நாட்டுச்சர்க்கரையும் போட்டு வைப்பேன். ‘பாண்டிச்சேரி’ மதரை என் ஃப்ரெண்ட் ரொம்ப வழிபடுவார். அவர் வீட்டு ஃப்ரிட்ஜிக்கு மேல மதர் போட்டோவை வச்சிருப்பார். எவ்வளவு கஷ்டமான சூழலிலும் அவர் வீட்டு ஃப்ரிட்ஜில் ஏதாவது ஒரு பொருள் சாப்பிட இருந்துட்டே இருக்கும்னு சொன்னார். அதிலிருந்து நானும் என் வீட்டு ஃப்ரிட்ஜ் மேலே மதர் ஃபோட்டோ ஒண்ணை வச்சுருக்கேன். என் ஃப்ரிட்ஜோட அன்னப்பூரணியா நினைச்சு அவங்களையும் வழிபட்டுட்டு வர்றேன்.
இப்படித் தன் பூஜை அறையில் இருக்கும் பல்வேறு தெய்வங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் காதல் சரண்யா. அவற்றைக் காண கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.