தென் மாநிலத்தில் உள்ள கோயிலில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜோய்மாலா என்ற பெண் யானையின் உடல்நிலையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு அனுப்ப அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வனத்துறை உயர் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஹிர்தேஷ் மிஸ்ரா தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வர உள்ளனர்.
அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியின் குஷன் குமார் சர்மா, மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன் மற்றும் டின்சுகியா மாவட்டத்தின் கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு அதிகாரி ரூபிஜோதி ககோட்டி ஆகியோர் கொண்ட குழு தமிழகத்திற்கு வர உள்ளனர்.
ஜோய்மாலாவை அசாமிற்கு திரும்ப கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இந்த குழு ஆலோசனை மேற்கொள்ளும். கிழக்கு அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரால், கடந்த 2008ஆம் ஆண்டு 6 மாதங்களுக்கு ஜோய்மாலா கோயிலுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. கோயில் அறக்கட்டளையை தமிழக அரசு நிர்வகித்து வருகிறது.
யானை சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அசாமில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அசாமிலிருந்து வளர்ப்பு யானைகள் அல்லது அதன் உரிமையாளர்களால் தென் மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல கோயில்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் திரும்ப கொண்டுவரப்பட்டது இல்லை.
அசாமைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரோஹித் சவுத்ரி பிப்ரவரி 2020இல் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அதில், அசாமில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு காட்டு மற்றும் வளர்ப்பு யானைகள் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கும் கடத்துவதற்கும் எதிராக புகார் அளித்தார். அசாமின் தலைமை வனவிலங்கு காப்பாளர் அலுவலகத்தின் உதவியுடன் இச்செயல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார்.
யானைகளை மற்ற மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு தலைமை வனவிலங்கு காப்பாளர் வழங்கிய அனுமதிகள் குறித்த தகவலை தனக்கு வழங்க அசாம் வனத்துறை மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். “மாநிலத்தின் வனவிலங்குகளின் பாதுகாவலராக உள்ள தலைமை வனவிலங்கு காப்பாளரிடம், மாநிலத்திலிருந்து எத்தனை யானைகள் மாற்றப்பட்டன அல்லது மாநிலத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. அதை முறையாக ஆவணப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட வில்லை என்பது உண்மை. இதுபோன்று யானை கடத்தல் கும்பலுக்கும் மாநில வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி நிறைய பேசுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil