பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்கள் மீது, இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மருத்துவர் லோகேஷ் வய்யுரு என்பவர், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பேராசிரியர் க்ளாஸ் ஷ்வாப் ஆகியோர் தங்கள் நாடுகளில் ஊழல் செய்து அதன் வாயிலாக ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அமெரிக்காவுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். மேலும், ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் எதிரிகளை உளவு பார்த்தனர்” என்று அதில் குறிப்பிடப்படப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கவுதம் அதானி, பேராசிரியர் க்ளாஸ் ஷ்வாப் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் டாக்டர் ஷ்வாப் சம்மனை பெற்றார். ஆகஸ்ட் 4 அன்று நீதிமன்ற சம்மன் இந்திய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கிற்கு எதிராக ஆஜரான நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ரவி பாத்ரா, ”இதுவொரு அபத்தமான மனு. குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரமாக எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. நீதிமன்றத்தில் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையும் படிக்க: ரஷ்யாவின் ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா பங்கேற்பு: அமெரிக்கா கவலைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM