சென்னையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரை மற்றும் டானிக்குகளை விற்பனை செய்துவந்த போலி மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4.400 மாத்திரைகள், டானிக் பறிமுதல் செய்யப்படும். சென்னை வேளச்சேரி காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டாவது பிரதான சாலையில் சந்தேகத்திற்க்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் இருந்து பையை போலீசார் சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் போதை சிரப்புகள் இருந்ததை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் இவர்கள் வேளச்சேரி எம்ஜிஆர் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த 24-வயதான ஜானகிராமன், வேளச்சேரி மதுரை முதலாவது தெருவைச் சேர்ந்த 23-வயதான மா.முனீஸ்வரன், வேளச்சேரி காமராஜர்புரம் மருதுபாண்டியர் சாலையைச் சேர்ந்த 24-வயதான பாலுசாமி, சென்னை கொடுங்கையூர் பத்திரி நகரைச் சேர்ந்த 32-வயதான சுல்தான் அலாவுதீன், சென்னை வியாசார்பாடி பள்ளம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த 32-வதான நரேஷ் என தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோர் போதை மாத்திரைகளை சென்னை கொடுங்கையூரில் இருந்து வாங்கி வந்து சென்னை வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை சிரப்புகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இதுபோன்ற போதை தரக்கூடிய (TYDOL) டைடால் மாத்திரைகளையும், 100மில்லி அளவுகொண்ட (CODISTAR SYRUP) கோடிஸ்டார் என்ற போதை தரக்கூடிய சிரப்புகளையும் (டானிக்) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
மேலும் போதை தரக்கூடிய (TYDOL) 4.400 டைடால் மாத்திரைகளையும், 100மில்லி அளவுகொண்ட (CODISTAR SYRUP) 44 சிறிய அட்டை பெட்டியில் இருந்த கோடிஸ்டார் என்ற போதை தரக்கூடிய சிரப்புகளையும் (டானிக்) போலீசார் செய்தனர்.
பின்னர் 5 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி சிறுவர்களையும் கல்லூரி இளைஞர்களையும் போதைக்கு அடிமையாக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பலை லாவகமாக கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் போதை டானிக்குகளை பறிமுதல் செய்த வேளச்சேரி காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட போலீசாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.